எது கொடியது ? வறுமை / தனிமை


எது கொடியது ? வறுமை / தனிமை



எது கொடியது ? வறுமை / தனிமை


    மனம் மகிழ்ந்து உளமகிழ்ந்து வாழ்வதற்கு என்ன தேவை என்று கேட்டு, அதை வரையறை செய்வதை காட்டிலும், ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது எளிமையாக இருக்கும். எது மகிழ்ச்சியை தரவல்லது? என்ற கேள்விக்கு நாம் விடை கண்டு பிடித்து விட்டோம் என்றால் வாழ்வு நம் வசப்படும். ஆனால், உண்மை என்னவெனில் அந்த கேள்விக்கான விடையை கண்டறிவது அத்துணை எளிதன்று. மகிழ்வும் மகிழ்வுக்கான காரணமும் ஒவ்வொரு மனிதரை பொருத்தும் மாறுபடும். வழிகள் வெவ்வேறாக இருந்தாலும் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்பதே மனித வாழ்வை ஆட்டிப் படைக்கும் சக்தியாகும்.

இப்படி மகிழ்ச்சியை தேடும், மனிதனுக்கு பல இகழ்ச்சிகளும் நேரிடும். அப்படிப்பட்ட இகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானது வறுமை மற்றும் தனிமை.

வறுமை கொடியது

    வறுமை என்ற வார்த்தை பல்வேறு துறை வல்லுநர்களால், பல்வேறு வகைகளில் அணுகப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வார்த்தை பெரும்பாலும் ஒரு மனிதன் அல்லது சமூகத்தின் பொருளாதார பின்னடைவு குறிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மனிதன் ஒரு சமூக விலகு என்ற அடிப்படையில் உணவு, உடை மற்றும் உறைவிடம் ஆகிய மூன்றும் அவனுடைய அடிப்படை தேவையாக கருதப்படுகின்றது. இந்த மூன்றையும் அடைவது ஒவ்வொரு மனிதனுடைய உரிமையாகும். ஒரு மனிதன் சோம்பி திரிவதால் அடையும் ஏழ்மை வறுமை அன்று. வளைந்து, வருந்தி உழைத்தும் வாழ்வில் பொருளாதார அடிப்படையில் வழுக்கி விழுவதே வறுமை.



    வரலாற்றில் வறுமையை சந்திக்காத மனிதர் சமுதாயம் இருக்காது என்று நாம் சொல்லிவிடலாம். மனிதனின் தன்னுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ளமுடியாத அந்த நிலையைதான் வறுமை என்று அழைக்கிறோம். வறுமையில் இருந்து மீள ஒரு மனிதன் நாயாய் உழைக்க வேண்டும் என்று நாம் பல நேரங்களில் கேள்வி பட்டிருப்போம். ஆம், வறுமையின் பீடியில் சிக்கிய ஒரு மனிதன், மனிதன் எனற நிலையை இழந்து, தாழ்ந்து ஒரு விலங்காக வாழ நிர்பந்திக்கப்படுகின்றார். மனிதனை ஒரு சமூக விலங்கு என்று நாம் அழைத்தாலும், அதை தாண்டி மாண்புடன் வாழ துடிக்கும் ஒரு தனித்த பிரபஞ்சம். வறுமையின் பிடியில் சிக்கிய ஒருவன் தன்னுடைய மாண்பை இழக்கிறான். தன்னுடைய வாழ்வின் கனவுகளை நினைவாக்க முடியாமல், தன் அன்றாட வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதையே, அவனுடைய கனவாக மாற்றிக் கொள்கிறான்.

    வறுமை ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்தில் மன வலியையும், உடல் வலியையும் அளிக்கின்றது. வாழ்வின் தேவைகளை நிறைவேற்ற ஓடும் மனிதன், தன் வாழ்வின் நிலையை கண்டு விரக்தி அடைந்து சோர்வடைகிறான். வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நிலையை விடுத்து, இவ்வுலகில் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வறுமை மனிதனை தள்ளுகின்றது . எனவே, வறுமை என்னும் கன்னியில் சிக்கும் மனிதன், தான் மனிதன் என்று மறக்கிறான். தன் வாழ்வின் மாண்பை இழக்கிறான். இறுதியில், தன் வாழ்வையே இழக்கிறான். எனவே வறுமை கொடியது.

தனிமை கொடியது

    முன்பகுதியில் கூறப்பட்டது போல மனிதன், சுய ஆளுமை திறன் கொண்ட ஒரு சமூக விலங்கு. அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட மனிதன் தன் உணர்ச்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முனைகின்றான். ஏனெனில், மனிதன் என்பவன் உணர்ச்சிகளின் தொகுப்பு. வறுமையின் பிடியிலிருந்து மீண்டும் மனிதன் என்ற நிலையை ஒரு மனிதன் அடைந்த பின்பு. தன்னுடைய உணர்ச்சிகளை கவனிக்க தொடங்குகிறான். அந்த உணர்ச்சிகளில் மிகவும் முக்கியமானது பிறருடைய உடனிருப்பு. இந்த உடன் இருப்பின் ஏமாற்ற நிலையே தனிமை.



    யாரும் இல்லாமல் வாழ்வது தனிமையில்லை, யாருக்காகவுமே வாழாமல், நான் மட்டும் எனக்கு போதும் வேறு யாரும் எனக்கில்லை என்று மனிதன் தம்மை தாமே, ஏமாற்றிக் கொள்வது தான் தனிமை. முற்றும் துறந்த துறவிகள் கூட தங்கள் வாழ்வின் மையமாக இறைவனை வைத்து, இறைவனுக்காக வாழ்கின்றனர்.



    நமக்காக யாரும் இல்லை என்பதால் ஒரு மனிதன் வருந்துவதில்லை. நாம் யாருக்குமானவராக இல்லை என்பதாலே வருந்துகிறான். அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட மனிதன், மனிதத்தின் ஆதாரத் தேவையான அன்பை‌ எதிர்பார்த்து ஏங்குகிறான். மேலும், இயல்பாகவே சமூகத்தோடு இணைந்து வாழும் அமைப்பை பெற்ற மனிதன், அதை அடைய முடியாத நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறான். இல்லையெனில், சமூகத்தை தன்னிடமிருந்து தனிமைப்படுத்துகிறான். இவ்வறாக, தனிமையின் என்ற ஆழ்கடலின் தரைமட்டத்தை அடைந்த மனிதன், தன் உணர்ச்சிகளின் பெருக்கை ஒரு கட்டத்தில் நிர்வகிக்க முடியாமல், வெடித்து சிதறுகிறான். ஒன்று தனிமையால் தன்னைத்தானே காயப்படுத்தி கொள்கிறான். இல்லையேல், தன்னை யார் அல்லது எது தனிமைப்படுத்துகிறதோ அதை காயப்படுத்த தொடங்குகிறான். சமூக விலங்கு என்ற நிலை இருந்து வெறும் விலங்கு என்ற நிலைக்கு தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கிறான். எனவே, தனிமை கொடியது.


வயிறு நிறையும் வரை வறுமை கொடியது

வாழ்க்கை நிறையும் வரை தனிமை கொடியது

 

Post a Comment

2 Comments

  1. My appreciation for your write-up, continue dear Selva

    ReplyDelete
  2. Thank you so much 🙏🙏🙏

    ReplyDelete

Don't leave me empty