Christian Cults

 மதத்தை கண் திறந்து நம்புவன் மனிதனாகிறான்.

மதத்தை கண் மூடி நம்புவன் மடையனாகிறான்.

மதத்தின் அரசியலை புரிந்து கொண்டவன் இந்த மடையர்களை வைத்து

வித்தைகாட்டுபவன் வியாபாரி ஆகின்றான்.

வழிபாட்டுக்குழு (Cult)

    பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதத்தில் நிறைவு காணாத மக்கள் ஏதேனும் ஒரு சித்தாந்தத்தின் அல்லது தத்துவத்தின் அடிப்படையில் ஈர்க்கப்பட்டு ஒரு குழுவாக, ஒரு மத கோட்பாட்டின் அடிப்படையில் இணைந்து வழிபடுவதும் செயல்படுவதுமே வழிபாட்டுக் குழுவாகும். உதாரணமாக, ரோமை கத்தோலிக்கத் திரு அவையில் பல குறைகள் இருப்பதாக குற்றம் சாட்டிய மார்டின் லூதர், திரு அவையை விட்டு வெளியேறி, தன்னைப் போன்ற ஒத்த சிந்தனை கொண்ட பலரை தன்னுடன் இணைத்துக் கொண்டு புதிய வழிபாட்டுக்குழு ஒன்றை தொடங்கினார். சமீப காலத்தில் தொடங்கப்படும் இது போன்ற வழிபாட்டு குழுக்கள் பெரும்பாலும் ஒற்றை மனிதரைச் சார்ந்து இயங்கி வருகிறது. இந்த வழிபாட்டுக் குழுவின் தலைவரின் இறப்பிற்கு பின் அந்த குழுவானது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகிறது.

சம்பாதிக்கும் சாமியார்கள்

    மக்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆன்மிகமானது அவர்களை நல்வாழ்வு படுத்து வதற்கான ஒரு சிறந்த கருவியாகும். அறிவியலால் விடை சொல்ல முடியாத பல புதிர்களுக்கு ஆன்மிகம் தான் பதில் தருகிறது. மக்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்த இந்த ஆன்மிகம் மதத்தை போதிக்கிறது. பலருக்கு மதத்தை பிடிக்கின்றது, சிலருக்கு மதம் பிடிக்கின்றது.

    பல வழிபாட்டு குழுக்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த வழிபாட்டு குழுக்களை வழிநடத்தும் சாமியார்களை பற்றியும் அதிகமாக கேள்விப்பட்டிருப்போம். இந்த சாமியார்கள் அல்லது குருக்கள், மக்களை தங்களுடைய பேச்சாலும் போதனைகளாலும் ஈற்கின்றனர். சில சாமியார்கள் தங்களையே கடவுளாக உருவகப்படுத்துகின்றனர். வரலாற்றில் பல புனிதர்களும், ஞானிகளும் தோன்றி இறைப்பணி ஆற்றி உள்ளனர். அதே வேலையில் பலர் இந்த ஆன்மீகம் என்னும் பாதையை தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்தி தங்களின் ஒழுக்கமற்ற வாழ்வாலும் இன்னும் பிற குற்றங்களாலும் தங்களின் ஆஸ்ரமங்களை குற்றங்களின் கூடாரமாக மாற்றியுள்ளனர். இது போன்ற வழிபாட்டு குழக்களைக் உருவாக்கிய சாமியார்கள் எல்லா மதத்திலும் உள்ளனர். கிறிஸ்தவம், பௌத்தம் மற்றும் பிற மதங்களை தழுவி பல மேலைநாட்டு வழிபாட்டுக் குழுக்களின் தலைவர்கள் இவ்வுலகில் உள்ளனர். அவர்களில் மிகப்பெரிய பாதிப்பை இவ்வுலகில் ஏற்படுத்திய மூன்று சம காலா வழிபாட்டு குழு தலைவர்களை பற்றி நாம் காண்போம்.

 ஜேம்ஸ் வேரன் ஜோன்ஸ்

    ஜோன்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வழிபாட்டு குழு தலைவர். தன்னுடைய சிறுவயது முதலில் பெந்தகோஸ்த்ததால் ஈர்க்கப்பட்ட ஜோன்ஸ் ஒரு மத போதகராக வேண்டும் என்று விரும்பினார். அவரின் விருப்பப்படி independent assemblies of God என்ற கிறிஸ்தவத்தின் ஒரு குழுவின் மத போதகராக பணியாற்றினார். அவர் அங்கு மத போதகராக பணியாற்ற காலங்களில் பலரை தன்பால் ஈர்த்தார். அவற்றிற்கு அவருடைய குணமளிக்கும் கூட்டங்கள் பெரிதும் உதவியாக இருந்தது. ஓரளவு மக்கள் வெள்ளம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த ஜோன்ஸ் 1950 இல் பீப்பிள்ஸ் டெம்பிள் என்ற குழுவை உருவாக்கினார். மேலும் பல இடங்களில் ஆலயங்களை எழுப்பி தன்னுடைய குழுவை விரிவு படுத்தினார். இந்தக் குழு மனிதாபிமான அடிப்படையிலான சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. அதே வேளையில் பீப்பிள் டெம்பிள் இன வேறுபாடுகள் அற்ற ஒரு வழிபாட்டு குழுவாக மாறியது. புகழின் உச்சியை அடைந்த ஜோன்ஸ் தன்னுடைய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு, தனக்கென குய்யானா என்ற இடத்தில் ஜோன்ஸ் டவுன் என்ற தனி நகரையே உண்டாக்கினார். 

    நாளடைவில் ஜோன்ஸ் டவுனில் உள்ள மக்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பல வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று செய்தி அமெரிக்காவில் வலம் வந்தது. இந்த குற்றச்சாட்டை விசாரிக்க லியோ ரியான் என்ற அரசு அதிகாரி ஜோன்ஸ் டவுனை பார்வையிட்டு அங்குள்ள மக்களை விசாரித்தார். தொடக்கத்தில் ஜோன்சுக்கு பயந்து உண்மையைச் சொல்ல மறுத்த மக்கள், பின்பு அங்கு நடக்கும் அத்தனை கொடுமைகளையும் லியோ ரியானிடம் பட்டியலிட்டனர். தன்னுடன், ஜோன்ஸ் டவுனின் சில மக்களை அழைத்துக் கொண்டு புறப்பட தயாரான லியோ ரியானையும் அவருடன் இருந்த அதிகாரிகளையும் மற்ற அவருடன் செல்ல தயரான மக்களையும், தன்னுடைய ஆட்களை வைத்து சுட்டுக் கொன்றார் ஜோன்ஸ். தன்னுடைய அழிவு நெருங்குவதை உணர்ந்து ஜோன்ஸ். ஜோன்ஸ் டவுனில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை கூட்டி இறைவனை நாம் அடைய நாம் இந்த உடலை விட்டு புறப்பட தயாராக வேண்டும் என்று சொல்லி அனைவரையும் விஷம் அருந்தும் படி மூளைச்சலவை செய்தார். அவருடைய பேச்சைக் கேட்டு 900 திற்கும் மேற்பட்ட மக்கள் விஷம் வாங்கி குடித்தனர். தங்களுடைய பிள்ளைகளுக்கும் அளித்தனர். இவற்றில் 300க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இருந்தபின் ஜோன்ஸ் தன்னைத்தானே சுட்டுக்கொன்று அவரும் இறந்தார். இந்த தற்கொலைக்கு புரட்சிகர தற்கொலை ன்று அவர் பெயரிட்டார். அமெரிக்க வரலாற்றில் இதுவே பெரிய குழு தற்கொலையாகும்.

ஷோகோ அசஹாரா

        ஷோகோ தன்னுடைய இளமை காலங்களை வறுமையில் கழித்தார். தன்னுடைய வறுமையை போக்குவதற்காக உரிமம் அற்ற மருந்துகளை விற்றார். இதனால் கைது செய்யப்பட்ட ஷோகோ சிறையில் இருந்த காலத்தில் கிறிஸ்தவம், பெளத்தம் மற்றும் இந்து மதத்தை படித்து புரிந்து கொண்டார். தன்னுடைய வறுமையை போக்குத்தற்கு ஆன்மீகம் தான் சரி என்று அறிந்த ஷோகோ. சிவனை முன்னிறுத்தி, இயேசுவைப் போல் தன்னை இறை மகனாக உருவகப்படுத்தி ஓம் ஷின்ரிக்யோ என்ற மதத்தை உருவாக்கினார். தன் மூலமாக இவ்வுலகிற்கு மீட்பு உண்டு என்று போதித்தார். மூன்றாம் உலக போரால் இவ்வுலகம் அழித்து பொலிவு பெறும் எனவே, அந்த போரை நாம் தான் தொடங்க வேண்டும் என்று கற்பித்து, தன் ஆஸ்ரமத்தில் உயிர் ஆயூதங்களை உருவாக்கினார். 

    டோக்கியோவிலும் ஜாப்பானின் பிற பகுதிகளிலும் விசவாயு மூலம் இவருடைய ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர். ஆயிரக்கணக்கனோர் பாதிக்கப்பட்டனர். பல அரசு அதிகாரிகளையும் கொலை செய்ய முயற்சி செய்தனர். இவருடைய ஆஸ்ரமங்களை சோதனையிட்ட அரசு பல உயிர் ஆயுதங்களைக் கைப்பற்றினர். பல இன்னல்களுக்கு பிறகு ஷோகோவை கைது செய்து 2018 ஆண்டு அரசு இவரை தூக்கிலிட்டது. இத்தனை மனித உயிர்களை காவு வாங்கிய ஓம் ஷாங்கிரியா அமைப்பு இன்று வரை ஐப்பானில் இயங்கி வருகின்றது.

விசாரியன்

    சோவியத் யூனியனில் பிறந்த விசாரியன், தொடக்கத்தில் சாலை பாதுகாப்பு காவலராக பணியாற்றினார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட விசாரியன் நாளடைவில் தம்முடைய பணியை விடுத்து ஆன்மீகத்தை தன்னுடைய பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிறிஸ்தவத்தையும் பௌத்தத்தையும் ஒன்றாக சேர்த்து தனக்கான கோட்பாட்டை உருவாக்கினார். தொடக்கத்தில் தன்னுடைய கோட்பாடுகளுக்கும் போதனைகளுக்கும் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு இல்லாமல் இருந்தது. இந்த இந்த காலகட்டத்தில் தன்னை இறை நற்செய்தியாளர் என்று சொல்லிக் கொண்டிருந்த விசாரியன், நானே இறைவன் என போதிக்க தொடங்கினார். இருப்பினும் அவருடைய போதனைகளுக்கு மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு இல்லாத காலகட்டத்தில், விளாட்மின் ரெட்கின் என்ற இசைக்கருவிகளை மீட்டும் மேடை நட்சத்திரத்தின் நட்பு கிடைத்தது. இருவரும் ஒன்றாக சேர்ந்து லாஸ்ட் டெஸ்ட்மெண்டியும் என்ற மதத்தை நிறுவினர். 

    விசாரியனின் மதக் கோட்பாடுகளை விளாட்மின் ரெட்கின் தன்னுடைய மேடை திறனின் மூலம் பிரபலமடையச் செய்தார். பல புதுமைகளை மக்கள் முன் விசாரியன் நடத்தி காட்டினார். ஆனால், அவையெல்லாம் விசாரினின் ஏற்பாடு என்பது பின்னர் தான் புரிந்தது. லாஸ்ட் டெஸ்ட்மெண்டியும் என்ற இவர்களின் சபை விரிவடைய தொடங்கியதும், தனக்கென ஒரு தனி கிராமத்தை நிறுவி தன்னுடைய ஆதரவாளர்களை அங்கே வரவழைத்து ஒரு குட்டி நகரத்தையே உண்டாக்கினார். பல லட்சம் மதிப்பிலான சொத்துக்களை விசாரியனிடம் ஒப்படைத்து ஏழ்மையான இல்லங்களில் வசிக்கத் தொடங்கினார்கள் இவருடைய ஆதரவாளர்கள். அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் கடுமையான சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க நிர்பந்திக்கப்பட்டனர். வெளி உலகத்துடன் புழக்கம் இல்லாததால் தாங்களே தங்கள் உணவுகளை விவசாயம் செய்து சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தனை கட்டுப்பாடுகளையும் மக்களுக்கு விதித்த விசாரியன் அவற்றை பின்பற்றவில்லை. மக்கள் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விசாரியனின் தனிப்பட்ட வாழ்வும் ஒழுக்கம் நிறைத்ததாக இல்லை. மேலும், ரஷ்யாவின் அதிபர் புட்டினுக்கு அரசை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார். அங்கீகாரம் பெறாத குழுவை உருவாக்குதல், பாலியல் அத்துமீறல், மக்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் பிற வழக்குகளின் கீழ் விசாரியனும் அவருடைய நண்பர் விளாட்மின் ரெட்கின்னும் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இன்று வரை அவர்கள் விசாரணையின் பெயரில் சிறையில் உள்ளனர்.

சிந்தனை தேவை

    ஆன்மீகமும், இறைவனும் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவைதான். ஆனால், அடைய முடியதவை இல்லை. அறிவற்ற உயிரினங்கள் இறைவனை நாடித் தேடுவதில்லை. சிந்தனையும் போதிய பகுத்தறிவும் திறனும் கொண்ட மனிதர்கள் மட்டுமே இறைவனை தேடுகின்றனர். ஏனெனில், அவர்களால் மட்டுமே இறைவனை புரிந்து கொள்ள முடியும். இதற்கு படித்தவர்களால் மட்டுமே இறைவனை புரிந்து கொள்ளும் என்பது பொருள் அல்ல. பகுத்தறிவு கொண்ட அனைவராலும் இறைவனை புரிந்து கொள்ள முடியும் என்பதே இதன் அர்த்தம். கல்வி அறிவு என்பது இந்த பகுத்தறிவை கூர்மைப்படுத்தும் ஒரு கருவி மட்டும் தான். பகுத்தறிவு என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இயல்பாகவே இருக்கின்றது. படித்தவர்கள் எல்லாம் பகுத்தறிவு பெற்றவர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. இது போன்ற மத வியாபாரிகளை அதிகமாக பின்பற்றுவோர் மெத்த படித்த மேதாவிகள் தான். சிந்தனைத் திறனை பயன்படுத்துவோம். நாம் சிந்திக்க தொடங்கும் நாளில், நாம் இறைவன நோக்கி ஓட வேண்டியதிருக்காது.

 சிந்தனைத் தெளிவானால் செயல்கள் மிளிரும்

செயல்கள் மிளர்ந்தால் வாழ்வு ஒளிரும்

வாழ்வு ஒளிர்ந்தால் இறைவன் நம் வசமாவர்.

    இறைவன் நமக்கு வெளியில் இருக்கும் புறக்காரணி என்பதை மறந்து, நம் உள்ளிருக்கும் நம் அகம் தான் நம்முடைய இறைவன் என்பதை உணர்ந்து, என்று நாம் சிந்திக்க தொடங்குகின்றோமோ, அன்று இது போன்ற மத வியாபாரிகளின் ஆட்டம் தானாக அடங்கும்.

சிந்தனை செய்வோம் சீர்மிகு நல்ல ஆன்மீக சமுதாயம் செய்வோம்.


Ref :

https://en.wikipedia.org/wiki/Jim_Jones

https://en.wikipedia.org/wiki/Shoko_Asahara

https://en.wikipedia.org/wiki/Vissarion


Post a Comment

0 Comments