நிஜத்தை விட நிழல் அதிக நிம்மதியைத் தந்தது. பிம்பப் கண்ணாடியின் முன் கனநேரம் நின்ற கண்ணன். தன் கரத்தை தன் இஷ்ட தேவதை இன்பரசி பற்றிக் கொண்டிருப்பது போல கற்பனைச் செய்து கனவில் மிதந்தான். திடீரென கையில் இருக்கம் அதிகரித்தது. வண்ணம் பூச வளர்க்கப்பட்ட வலக்கரத்தின் நகங்கள் கண்ணனுக்கு வலி தந்தது. அத்துடன் இணைந்து “கண்ணன், கண்ணன்” என்ற ஒலியும் வந்தது. ஒரு நொடியில் உணர்வுக்கு வந்த கண்ணன் தான் காண்பது கனவல்ல, நிஜமாகவே தன்னுடைய நிம்மதி தன் அருகிலிருப்பதை அறிந்தான். இன்பரசியின் இன்பக்கரத்தின் பிடியிலிருந்து மீள முடியாமல் தவித்தான். வலக்கை அவளின் கரத்தில் சிறைப்பட்டிருக்க, இடக்கரம் அச்சத்தால் அசைவற்று இருந்தது. நிழலை விடுத்து நிஜத்திற்கு வந்த கண்ணன் இன்பரசியிடம், “நீ ஆபிஸ்க்கு போகலையா" , என்று கேட்டான். சிறிதும் காத்திருக்காமல்,
“நீ லீவ் போட்ட, ஆதான் நானும் லீவ் போட்ட" என்றாள். அவள்
பதில் அளித்த அக்களிப்பை மறைத்துக் கொண்டு, அலுப்புடன் கேட்பது
போல், " நான் இங்க இருப்பன்னு உனக்கு எப்படி
தெரியும்", என்று அவன் முடிப்பதற்குள், “போன வாரம் நீ தான சொன்ன " என சாதரணமாக பதிலளித்தாள்.
இருவருக்கும் இடையே அமைதி நிலைவியது. “வா, அந்தப்
பக்கம் போவோம்" என்று சொல்லியவாறு அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு புடவைகள்
பிரிவுக்கு அவனை இழுத்துச் சென்றாள். அவள் முன்னேறிச் சென்றாலும், அவனுடைய
சிந்தனை இன்னும் போன வார நிகழ்வுகளில் நின்று விட்டது. "எப்படி இவள் எதுவுமே
நடக்காதது போல் நடந்து கொள்கிறாள், ஒருவேளை
நடிக்கிறாளோ?" என்று கேட்க துணிவில்லாமல் கேள்வியை மென்று
முழுகினான்.
"டேய், இது எப்படியிருக்கு, அது
எப்படியிருக்கு” என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு புடவையாக எடுத்து தன் மீது வைத்துக்
காண்பித்தால். அவளுடைய இயல்பு நிலையை கண்ட கண்ணன் அவளுக்கு ஈடு கொடுக்கும் முயற்சி
செய்தான். “இல்லை, உன்ன விட அவங்க ரொம்ப கலர். இது அவங்களுக்கு நல்லா
இருக்காது, அத பாரு,” என்று
சொல்லி அவளின் இயல்பு நிலையை அசைத்து பார்த்தான். அவள் கண்கள் தர்பூசணி தசையின் நிறத்திற்கு
மாறியது. “ஆமாம்மா, அவங்க ரொம்ப கலர் தான், நீங்களே
பாத்துக்கங்க”, என்று குமட்டலுடன் கூறினாள். “சரி சரி
பொறாமப்படாதே அது எப்படி இருக்குன்னு பார்" என்று சொல்லி இன்பரசியின் பேச்சை
நிறுத்த முடியாமல் அவளுடைய எரிச்சலில் சற்று எண்ணெய் ஊற்றினான். இருவருக்கிடையிலும்
அமைதி குடி கொண்டது. கண்ணனின் கைப்பேசி அவர் இருவருக்கிடையில் இருந்த அமைதியை
குலைத்தது. கண்ணன் கைபேசியை கையில் எடுக்க விரும்பாமல், இன்பரசியின்
உள்ளத்தில் உள்ளதை அறிய முயற்சி செய்தான். இன்னும் ஒரு வாரத்தில் வேறொரு பெண்ணுடன்
நிச்சயத்தை வைத்துக்கொண்டு இன்பரசியின் இதயத்தில் தன் இருப்பைப் பற்றி எண்ணுவது
முறையல்ல என்ற எண்ணங்கள் அவனை தடுமாற வைத்தது. காதல் கதையை இன்பரசியிடம்
அரங்கேற்றி ஒரு வாரம் ஆகியும் அவன் பதிலாக அவள் கோபத்தையும் பெறவில்லை, கொஞ்சலுக்கும்
இடமில்லை என்ன செய்வதென்று குமுறிய கண்ணனிடம் இன்பரசி,
"இந்தப் புடவை நல்லா இருக்கா" என்று ஒரு புடவை காட்டி கேட்டாள்,
‘ம்’என்று தலையை ஆட்டினான்.
“அப்ப நம்ம நிச்சயத்துக்கு, நான் இந்த புடவையை
கட்டிக்கிறேன், பில் பே பண்ணிட்டு வா! என்று அவனை இடித்து விட்டு
நகர்ந்தாள், அவன் உள்ளத்தோடு அவள் உள்ளத்தை இணைத்தாள்.
0 Comments
Don't leave me empty