என்னதா! ஆச்சு நம்ம தமிழ்நாட்டுக்கு?
மாபெரும் மேதைகளும், அரசியல் சாணக்கியர்களும் களம் கண்ட தமிழகத்தின் அரசியல் மேடையில் இன்று எது பேசினாலும் குத்தமாகின்றது. அரசின் மீது விமர்சனம் வைப்பதற்கு, அரசியலின் ஆழம் கண்ட பெரும் தலைவர்களும் தயங்குகின்றார்கள். 200 ரூபாய் ஊபீ, தொம்பிகள், சங்கிகள் மற்றும் இப்பொழுது புதிதாக அணில்கள் என்ற உயரிய சொற்கள் தழிழக அரசியலில் சகஜமாகிவிட்டன. திராவிடம், தமிழ் தேசியம், சனாதனம் மற்றும் இந்திய தேசியம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பல்வேறு கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் இருந்தாலும், அதில் அதிகமாக மிளிர்வது பெரியார் வகுத்து தந்த திராவிட சித்தாந்தம். தமிழகத்தை கடந்த அறை நூற்றாண்டாக ஆண்டு வரும் திராவிட கட்சிகள் இந்த சித்தாந்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
தேசிய கட்சிகளை திசையாறியது சிதறடித்த பேரறிஞர் அண்ணா தழிழகத்தின் அரசியல் பாதையை வெகுவாக மாற்றினார் என்றால் அது மிகையாகாது. தலைவர்கள் தீட்டிய அரசியல் கோட்பாடுகளை (திரைப்பட)களைஞர்கள் தங்கள் வசமாக்கினார். அதன் விளைவுதான், தழிழகத்தின் இன்றைய அரசியல் நிலை. தமிழகத்தின் அரசியலை திரைத்துறை தவிர்த்து இன்று யோசிக்க முடியாத நிலை ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஆளும் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் வைப்பது, அது பின்பற்றக் கூடிய சித்தாந்தத்தின் மீதான விமர்சனங்களாக புனையப்படுகின்றது. தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் பெரும் பங்களிப்பை அளித்திருந்தாலும், இக்கட்சிகளில் பெரும் பொறுப்புகளை வகிக்கும் நபர்களின் சொத்து மதிப்பானது, அவர்கள் எவ்வளவு சுத்தமானவர்கள் என்று நாம் தெரிந்து கொள்ளலாம். தத்துவ மேதை ஃப்ளோட்டோ சொல்வது போல், மக்கள் தங்களை பெரும் தீமையிலிருந்து காத்துக்கொள்வதற்கு, குறைந்த தீமையை தேர்ந்தெடுக்கின்றனர் என்பது அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத உண்மை. நாமும், நாம் பரிசுத்தவான்களால் ஆளப்படுகின்றோம் என்று நம்மையே நாம் ஏமாற்றி கொள்கின்றோம்.
பாஜக தழிழகத்திற்குள் வேரூன்றகூடாது என்பதற்காக, சமத்துவத்தை இலக்காக கொண்ட அனைத்து கட்சிகளும்; ஒரே அணியில் திரள்வது நல்லதுதான் ஆனால், எதிர்கருத்து கொண்டவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இல்லையெனில், அரசின் குறைகளை யார் சுட்டிக் காட்டுவது? திமுக அரசு மற்றும் அதன் முறைகேடுகள் மீதான தாக்குதல், திராவிட சித்தாந்தத்திற்கான தாக்குதல்கள் கிடையாது என்ற புரிதல் நமக்கு வேண்டும். அரசியல் விமசகர்களும், ஊடகங்களும் மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆளும் அரசின் முறைகேடுகளை சுட்டிகாட்டுவதற்கு பதிலாக ஆளும் அரசின் சாதனைச் சொல்லிகளாக மாறிவிட்டனர்.
சிந்தாத்தங்களுக்கிடையேயான சொற் போர்கள் தேவைதான் ஆனால், அவைகளால் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள் புறக்கணிக்கப்படக்கூடாது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு, கனிம வள சுரண்டல், கல்வி வியாபாரம் போன்ற மக்கள் நல பிரச்சனைகளைகள் அடிப்படையிலான அரசியல் பார்வை இன்று தமிழகத்தில் மிகவும் குறைந்துவிட்டது. பாஜகா-வின் இந்துத்துவா கொள்கையை எதிர்;க்க வேண்டும் என்ற அரசியல் தெளிவை பெற்ற தமிழ்நாட்டு மக்கள் ஊழலற்ற அரசை அமைப்பதுதான் ஜனநாயகத்தின் கடமை என்பதை மறந்துவிட்டனர். சித்தாந்தங்கள் முக்கியம் என்பதில் நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஏனெனில், அவைதான், அரசின் கொள்கை முடிவுகளுக்கு அடிப்படை. அதே சமயத்தில், ஊழலற்ற அரசும் நம்முடைய இலட்சியமாக இருக்க வேண்டும்.
காட்டுத்தீ போல் எரிந்த அண்ணாமலை பல்கலைகழக மாணவிக்கான போரட்டம், நட்சத்திர பின்னணி தவேக-வால் திசை திருப்பப்பட்டு, ஆளுநரின்; சட்டமன்ற அதிரடிகளால் முடித்துவைக்கப் பட்டுவிட்டது. இன்று, தமிழ்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா? என்ற தகராறில் ஊடகங்களால் மாணவியின் பிரச்சனை மறைக்கப்பட்டது. பாஜகா-வை திமுகா-வின் துணைகொண்டு தடுப்பது எவ்வளவு முக்கியமோ, அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது ஊழலற்ற நேர்மையான அரசை நிறுவுவது. கண்களை திறப்போம்! அரசியல் களத்தில் இன்று இருப்பவர்கள் சித்தாந்த சீட்டுகளை இலாவமாக கையாண்டு நம் வாக்கை பெற்று, நம் வாழ்வை கெடுக்கின்றனர். புதிதாக வந்தவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
நம்மை ஆண்டவர்களும், ஆள்பவர்களும் நம்மை ஏமாற்றுகின்றார்கள். தமிழகத்தின் அரசியல் சூழலை சமன் செய்ய, கொள்கை தெளிவை ஏற்;படுத்தக் கூடிய தீர்க்கமான அரசியல் புரட்சி தேவை. இந்த புரட்சியை திரை நட்சத்திரத்தால் ஏற்படுத்த முடியாது என்றும் நமக்கு தெரியும், இருந்தும் ஏன் இந்த நிலை தமிழகத்தில் தொடர்கின்றது. ஏனெனில், மாற்றத்தை நாம் கொள்கை தெளிவு கொண்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. பிரபலங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றோம். தங்களுடைய கொள்கையால் பிரபலமடைந்தவர்கள் நாட்டை ஆள வேண்டும். கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் புறக்கணிக்கப் படும் நாளில் தமிழகத்தின் இந்நிலை மாறும். மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்குவோம்.
சிந்திப்போம்! தமிழகத்தின் தரம் உயர்த்துவோம்!
0 Comments
Don't leave me empty