கருநீல வானத்தை நீண்டு தொட்டுக் கொண்டிருந்த சாலை, எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக பாய்ந்து சென்ற என் எண்ணங்கள் கண்ணீராய் உருவெடுத்தது என் கண்ணை மறைக்க, இம்மண்ணை துறக்க என் மனது எண்ணியது. ஆனால், என் செய்வது என் அன்னையின் அரவணைப்பு என் உயிரின் உயர்வை உணர்த்தியது.
இத்தனை கண்ணீருக்கும் காரணம் யார்? அவளா? இல்லை. அவள் மீது எனக்கிருந்த ஆவல் தான். பள்ளி நாட்களில் பாட நூல்களில் அவள் பெயரெழுதி அழகு பார்த்தேன். பக்குவமாய் பார்த்து, பார்த்து வளர்த்த என் ஆட்டிற்கு அவள் பெயரிட்டு அள்ளித் தூக்கி அகமகிழ்ந்தேன். நெருங்கலாம் என நினைக்கும் பொழுதெல்லாம், நெருடல்கள் என்னைத் தாக்கி எனக்கு நெருக்கடியைத்தான் தந்தது. நெருடல்களை மறந்தேன், நெருங்கிச் செல்ல துணிந்தேன், மெல்ல என் மனம் திறந்தேன். கால்கள் நடுங்க, என் கைகள் குளிர குணமகள், என் குலமகள் அவள் முன் விரைந்தேன். பக்கம் பக்கமாய் பேச பல பயிற்சி எடுத்தேன். பயிற்சிகள் அனைத்தும் மறந்தது. ஆனால், என் முயற்சி வெற்றியில் முடிந்தது. முடிந்து வைத்திருந்த மூட்டைகளை முடிச்சவிழ்த்தேன். என் பயிற்சி பயனளிக்கவில்லை என்றாலும், அவள் மீது நான் கொண்ட பாசம் அவளுக்கு புரியாமல் இல்லை. பூரித்து போனாள், புன்னகை உதிர்த்தாள். என் உடலில் உதிர்த்த வெந்நீர் குளிர்நீராய் மாறியது. இதைச் சொல்ல இத்தனை நாளா? என கொஞ்சும் கோபத்தால் என்னை சுட்டாள். உண்மையில் நான் ஒரு முட்டாள்.
பள்ளிக் காலத்தில் பதியம் போட்ட விதை, கல்லூரியில் கனி தந்தது. என்னவளின் மன மகிழ்வுக்காக மலையையும் வளைக்க துணிவு கொண்டேன். என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது, அவள் உடனிருப்பு என் இருப்பை எனக்கு உணர்த்தியது. என் உள்ளத்தின் கணம் குறைந்தது. சொர்க்கத்தின் உண்மை நிறம் புரிந்தது.
எல்லாம் ஒரு
நாள் முடிவுக்கு வந்தது. என்னுடைய சைகைகளை நன்கறிந்தவள், சாலை விதிகளை அறியாதவள். நான்
நெருங்கு பொழுதெல்லாம் விலகிச் செல்லும் அவள். அந்த எமனுருவான 87 ஏ வை மட்டும் என்
அனுகிச் சென்று முத்தமிட்டாள். அந்தப் பேருந்தின் மீது எனக்கு எல்லையில்லா பொறாமை.
நினைவுகளை விடுத்து, உணர்வுக்கு வந்தேன். என் மாமியாருக்கும் அவளுடைய மாமியாருக்கும் வாங்கிய மருந்தை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு சாலையில் தொடர்ந்து நடத்தேன் அவள் நினைவுகளோடு.
0 Comments
Don't leave me empty